திரு. காடேஸ்வரா.
சி. சுப்பிரமணியம்

திரு. காடேஸ்வரா .சி. சுப்பிரமணியம் - மாநிலத் தலைவர்

அன்றைய கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா வாய் பாளையம் கிராமத்தில் திரு.சின்னசாமி, திருமதி . செல்லம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1956 சித்திரை மாதம் பத்தாம் நாள் பிறந்தார். தன்னுடைய பால பருவத்தை திருப்பூரில் கழித்தவர் . ஆரம்ப காலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தொழிற்சங்க தலைவராக திருப்பூரில் பொறுப்பு வகித்தார். அந்த காலகட்டத்திலே இந்திராகாந்தி அவர்களால் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது பத்திரிக்கைகளில் வந்த செய்திகளைக் கண்டு மனம் வருந்தினார். அந்த சமயத்தில் RSS ஆற்றிய அரும்பணிகளைக் கண்டு வியந்தார்.

நெருக்கடி நிலை ரத்து செய்யப்பட்ட பின் RSS தடை விலக்கப்பட்ட பின் RSS பற்றிய பத்திரிகைகளில் வந்த செய்திகள், செவிவழிச் செய்திகள் எல்லாம் கேள்விப்பட்டு ஆர்வம் கொண்டு 1977 ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த RSS ன் அணிவகுப்பு ஊர்வலத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அச்சமயம் அந்த அணிவகுப்பில் அதனுடைய பொதுக் கூட்டத்திலே திரு.சூரிய நாராயண ராவ் அவர்களுடைய உரையைக் கேட்டபின் RSS ல் இணைய முகவரியை கொடுத்து விட்டு வந்தார். அன்றைய ஜில்லா பிரச்சாரக் ஆக இருந்த சுதாகர் அவர்களும், காலஞ்சென்ற ஹிந்து முன்னணியின் மாநில இணை அமைப்பாளர் திரு. மூர்த்தி அவர்களும் திரு.சுப்பிரமணியம் அவர்களை நேரில் சென்று பார்த்து பேசி RSS- க்கு அழைத்து வந்தனர். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் RSS னுடைய பணியில் தாலுக்கா செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் ஈடுபட்டார்.

இன்றைய மாநில பொதுச்செயலாளர் திரு.முருகானந்தம் அவர்கள் கோவை மாவட்ட அமைப்பாளராக இருந்த பொழுது அன்றைய ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் திரு.ரகுராம் அவர்களும், திரு.முருகானந்தம் அவர்களும் திரு. சுப்பிரமணியம் அவர்களை இந்துமுன்னணியில் பணியாற்றக் கோரி திருப்பூர் நகர அமைப்பாளர் என்று அறிவித்து விட்டு சென்றனர். அன்றிலிருந்து அவர் ஹிந்து முன்னணி இயக்க வேலைகளை தொடர்ந்து வளர்த்து வந்தார். இவருடைய கடும் உழைப்பினால் ஹிந்து முன்னணி வளர ஆரம்பித்தது. இயற்கையிலேயே இந்த கொங்கு பகுதியில் இருக்கக்கூடிய ஒரு பழக்கமான அவர்கள் செய்யும் தொழில் ஸ்தாபனத்தில் பெயரை தங்களுடைய பெயரோடு இணைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. அதனால் இவர் நடத்தி வந்த காடேஸ்வரா சா மில் என்ற நிறுவனத்தின் பெயரையும் சேர்த்து இவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் என்று அழைக்கப்பட்டார்.

இவருடைய கடும் உழைப்பின் காரணமாக இந்து முன்னணி வளர்வது கம்யூனிஸ்டுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. தொழிற்சங்கத் தலைவராக இருந்து இந்து இயக்கங்களுக்கு வந்ததனால் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக வியூகம் வகுத்து வெற்றி பெறுவதில் திறமை சாலியாக விளங்கினார். அதனால் இவர் மீது பல பொய் வழக்குகள் புனையப்பட்டு சிறைக்கு செல்ல நேரிட்டது. தன் மேல் போடப்பட்ட பொய் வழக்குகளை எல்லாம் உடைத்து நிரபராதி என்று நிரூபித்து வந்தார். பின்பு நகர அமைப்பாளர்[பொறுப்பில் இருந்து மாவட்ட செயலாளர், மாவட்ட பொதுச் செயலாளர், மாநில செயலாளர், மாநில பொதுச்செயலாளர் என படிப்படியாக இயக்கத்தை வளர்த்தி தானும் இயக்கத்தோடு வளர்ந்து 2016 ஆம் ஆண்டு முதல் மாநில தலைவராக இருந்தும் வழி நடத்துகின்றார். பல்வேறு சோதனையான காலகட்டங்களில் இயக்கத்தை தாங்கிப்பிடித்து இயக்கத்தில் இருக்கக்கூடிய தொண்டர்களுக்கு ஒரு பெரும் ஆபத்பாந்தவனாக விளங்குபவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள்.

பல்வேறு வழக்குகள், பல்வேறு விதமான நெருக்கடிகள் எல்லாவற்றையும் கடந்து இவருடைய பணியின் காரணமாக கொங்குப்பகுதியில் இந்துமுன்னணி மிகப் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக 1994 ஆம் ஆண்டு உலகிலேயே முதல் முறையாக திருப்பூரில் 10,008 (10 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட) திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது . இஸ்லாமிய பயங்கரவாதி இமாம் அலி அந்த நிகழ்ச்சியை சீர்குலைக்கும் சதித் திட்டத்தோடு வந்தது தெய்வாதீனமாக தடுக்கப்பட்டது. ஆனால் இந்த தகவல் பத்திரிகைகளில் வந்ததினால் பொதுமக்கள் தைரியமாக கலந்து கொள்வார்களா என்ற ஒரு சங்கடமான சூழ்நிலை உருவாகியிருந்தது. விழா நடக்குமா? நடக்காதா? என்னவாகும் என்ற கேள்வி எழுந்தபோது அனைவரிடத்திலும் நம்பிக்கை கொடுத்து, வீதிவீதியாக ஊழியர்களை செல்லச் சொல்லி, பொதுமக்களிடத்தில் பிரச்சாரம் செய்து அவர்களுடைய அச்சத்தைப் போக்கி 10008 தாய்மார்களை குறிப்பிட்ட அதே தேதியில், அதே நேரத்தில் அழைத்து வந்து பூஜை செய்ய வைத்த ஒரு பெருமைக்குச் சொந்தக்காரர்.

வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களுடைய பெரும் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர். அதே போல் 2018 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் பொங்கலூரிலே ஒரு மாபெரும் சோடஷ மகாலட்சுமி மஹாயாகத்தை மூன்று நாட்கள் மிகப்பெரிய விழாவாக ,ஆன்மிக வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சியாக நடத்தியது. அதிலே ஒரு லட்சம் குடும்பங்கள் கலந்துகொண்டன. ஆயிரத்து 8 க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு பூஜை செய்யப்பட்டது. 108 குதிரைகளை வைத்து அஸ்வ பூஜை நடைபெற்றது. கஜ பூஜை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டி , எப்படியெல்லாம் அந்த நிகழ்ச்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதிலே மிக நுட்பமாக சிந்தித்து திட்டமிட்டு செயலாற்றி வெற்றி கண்டவர் .

இவருடைய சிறப்பம்சம் என்னவென்று சொன்னால் மிகப்பெரிய வேலைகளை இவருடைய முயற்சியின் காரணமாக நடந்திருந்தாலும் கூட பிற பொறுப்பாளர்கள் தான் அதைச் செய்தார்கள் என்பதை சொல்லி தன்னடக்கத்துடன் இருப்பார். இன்றுவரை அவர் கால்பட்ட இடங்களெல்லாம் ஹிந்து முன்னணியானது வெற்றிக் கொடி நாட்டி வந்திருக்கின்றது. எடுத்த அத்தனை போராட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றார் . இயக்கம் வளராத பகுதிகளுக்குக் கூட இவர் பொறுப்பு எடுத்துக் கொண்டு மிக நுட்பமான திட்டங்களை செயல்படுத்தி பல்வேறு கருத்துக்களை அதில் இணைத்துக் கொண்டு அந்த பகுதியில் வேலையை வளரச் செய்த பெருமைக்கு சொந்தக்காரர்.