சிறு வயதில்

தந்தை : மு . இராமஸ்வாமி
தாய் : செல்லம்மாள்
பிறந்த நாள் : 19-9-1927

பிறந்த ஊர் : சீர்காழி நாகை மாவட்டம். சம்பந்தருக்கு ஞானப்பால் தந்த திருத்தலம் . பள்ளிச் சிறுவனாய் இருந்த காலம். அவரது வீட்டில் ஓர் ஓவியம் உண்டு . பகத்சிங் தன் தலையை வெட்டி எடுத்து பாரத மாதாவுக்குக் காணிக்கை செலுத்து வது போன்ற உயிரோட்டத்துடன் அமைந்த ஓவியம் அது . ஒருநாள் இராம.கோபாலன் தன் தந்தையிடம் அந்த ஓவியத்துக்கு அர்த்தம் கேட்கிறார் . தந்தை சொன்னார் : "நாட்டுக்காக வாழணும் . இந்த நாட்டுக்காக எந்தத் தியாகமும் பண்ணலாம் . தேவைப் பட்டால் உயிரையும் தரலாம் . இந்தப் படத்துக்கு அது தான்பா அர்த்தம்” என தந்தை கூறிய விளக்கம் சிறுவன் இராம.கோபாலனின் அடி மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

விதை வளர்ந்தது

அது புதைந்து விதைவிட்டு, வேர் விட்டு , கிளை விட்டு விருட்சமானது . தந்தை ஒரு தீவிர தேசியவாதி. அவர் கூறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகள் சிலிர்க்க வைக்கும். பாரதி , திலகர் , வாஞ்சிநாதன் , வஉசி . பற்றி தந்தை கூறும்போது , தானும் அது போல வாழவேண்டும் என்ற எண்ணம் இராம . கோபாலன் மனதில் எழுந்தது . தந்தை சிறு விவசாயி . காவிரி நீர் பிரச்னை இல்லாத அந்தக் காலத்தில் முப்போக விளைச்சல்! பள்ளிச் சிறுவனாய் இராம.கோபாலன் துள்ளித் திரிந்த காலம். சுதந்திர நெருப்பு நாடெங்கும் பற்றியெரிந்தது . அந்த நெருப்பு இவரையும் விட்டு வைக்க வில்லை . சுதந்திரப் போராட்ட மேடைகளில் பாரதி பாடல்களை உணர்ச்சி ததும்ப கம்பீரமாகப் பாடுவார் . சீர்காழியிலுள்ள சட்டநாத ஸ்வாமி திருக்கோயிலுக்குள் அடிக்கடி சுதந்திரப் போராட்டக் கூட்டங்கள் நடக்கும் . பட்டுக்கோட்டையிலிருந்து நாடிமுத்துப்பிள்ளை என்ற சுதந்திரப் போராட்ட வீரர் பல முறை அங்கு வந்து பேசியிருக்கிறார் .

கல்வியும் – கேள்வியும்

அது போன்ற கூட்டங்களில் கலந்துகொண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேச்சு களைக் கேட்க .... கேட்க ... சிறுவன் இராம.கோபாலனுக்குள் தேசப்பற்றும், தேசிய உணர்வும் படிப்படியாக கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின . ஒருபுறம் தேச உணர்வு பொங்கி யெழுந்தாலும் இராம.கோபாலன் படிப்பில் சோடை போகவில்லை . நன்றாகப் படித்தார் . ஆனாலும் , சிறுவர்களுக்கே உரிய வால் தனமும் உண்டு . சீர்காழியில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு , கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தார் . வீட்டில் இன்ஜினீயரிங் எடுத்துப் படிக்கச் சொன்னார்கள் . ஆனால் , அதற்கு ஏகப்பட்ட பணம் தேவைப்பட்டது . இதனால் டிப்ளமோ முடித்து ஏ.எம்.ஐ.ஈ.ச. சேர்ந்து படித்துக் கொண்டிருந்த போது 1945 - ல் ஆர்.எஸ்.எஸ் - ல் சேர்ந்தார் .

தன்னைத் துறந்து

சமுதாயத்தை நினைத்து படித்து முடித்த பிறகு , மின்சாரத் துறையில் வேலை கிடைத்தது . குடியாத்தத்தில் பணி . இவர் அங்கு வேலை பார்த்ததை விட , ஆர்.எஸ்.எஸ்.ஸுக்காக பார்த்த வேலைதான் அதிகம் .

இந்த நிலையில்தான் , சுதந்திரம் கிடைத்து. தேசப்பிரிவினையின் போது , சிந்து பகுதியிலிருந்து இந்து மக்கள் புலம் பெயர்ந்து சென்னை வந்தார்கள் அவர்கள் ஆவடியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் . ஆர்.எஸ்.எஸ் சார்பாக இராம.கோபாலன் தொண்டர்களுடன் ஆவடிக்குச் சென்று ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த மக்களுக்கு உதவி செய்வார்

கிளர்ந்தெழுந்த உள்ளம்

ஆவடியில் தங்க வைக்கப்பட்ட பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட அகதிகளின் கண்ணீர்க் கதைகளைக் கேட்ட இராம.கோபாலன் துடித்துப் போனார். மனதைச் சோகம் அப்பிக் கொண்டது . இந்த நாட்டு மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ வேண்டியுள்ளதே என்று கொதித்தார் .

இந்துக்கள் பலஹீனமாக இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என்ற தீர்மானம் அவர் மனசுக்குள், இந்துக்களைப் பாதுகாக்கவும் பலப்படுத்தவும் முழுநேரத் தொண்டராக (பிரச்சாரக்) முடிவெடுத்தார் இராம .கோபாலன்.

நானல்ல...

நாடுதான் முக்கியம் நாடு முக்கியம் . நாடு என்பது வெறும் நிலமல்ல; அதில் வாழும் மக்கள் ! அந்த மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் .

அதை ஆர்.எஸ்.எஸ் . ஆல் மட்டுமே நிகழ்த்திக் காட்ட முடியுமென்று முடிவெடுத்தவர் , தனது வேலையை உதறினார் . முழுநேர ஆர்.எஸ்.எஸ் . (பிரச்சாரக்) தொண்டரானார். நாட்டுக்காக வாழுவோம் என்ற முடிவு தமிழகத்தின் போக்கை மாற்றியது.