1981
1981 கோட்டை கோயிலும் ஹிந்து எழுச்சியும் அப்போது வேலூர் , திருவண்ணாமலை இரண்டும் ஒருங்கிணைந்த ஒரே மாவட்டமாக , வட ஆற்காடு மாவட்டம் என்ற பெயரில் இருந்தது . வேலூரில் ஹிந்துக்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று சில இளைஞர்களுடன் நடந்த கூட்டத்தில் திரு. இராம.கோபாலன் கேட்டார் . என்ன சார் ? எங்க ஊரில் சாமியே இல்லாத கோயில் இருக்கு சார் . இதை விட வேறென்ன அவமானம் வேண்டும் . இந்தப் பிரச்சினையை முதலில் உங்களால் தீர்க்க முடியுமா ? முடியும் என்றால் சொல்லுங்க சார் . நாங்கள் அதுக்காக எதையும் செய்வோம் என்றனர் . இதை உங்களுடன் சேர்ந்து பொது மக்களையெல்லாம் ஒன்றுதிரட்டி ஹிந்து எழுச்சியை உருவாக்கி அதன்மூலம் சாமியை வைக்க முடியும் என்று உறுதியளித்தார் . வேலூரின் சரித்திரத்தை மாற்றி அமைத்தது அந்த நிகழ்வு .
வேலூர் கோட்டை கோயிலை மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக 300 க்கும் மேற்பட்ட தெரு முனைப் பிரச்சாரங்களும் 100 க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களும் தொடர்ந்து 4 மாதங்கள் நடைபெற்றன .
கந்திலி , திருப்பத்தூர் , நாட்றம்பள்ளி முதல் ஆரம்பித்து வந்தவாசி , செய்யார் , தெள்ளாறு , செங்கம் என்று வேலூர் , திருவண்ணாமலை மாவட்டங்கள் முழுவதும் இந்த பிரச்சார நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன . இறுதியாக வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் “ கோட்டையும் , ஜலகண்டேஸ்வரர் ஆலயமும் இந்துக்களுக்குச் சொந்தமானது , இதில் பராமரிப்பு என்ற பெயரில் மத்திய அரசின் தொல்பொருள் துறை ஆலயத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதை நாங்கள் கண்டிக்கிறோம் . வழிபாடு செய்ய ஆலயத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் . நாட்டிலேயே வேலூர் கோட்டையில் மட்டும் தான் சாமியில்லாத கோயில் இருக்கிறது . இந்த நிலையைப் போக்க வேண்டும் .
600 ஆண்டுகட்கு முன்பு இந்து மன்னர்களான திம்ம ரெட்டி , பொம்மி ரெட்டி என்னும் சிற்றரசர்கள் ஜலகண்டேஸ்வரர் கோயிலைக் கட்டினார்கள் . அந்தக் கோயிலுக்கு சேவை செய்பவர் களுக்காக சில வீடுகளும் , அரசுப் பணியாளர்கள் தங்குவதற்கு சில வீடுகளும் ஆலயத்திற்குப் பின்புறம் கட்டப்பட்டது . திப்பு சுல்தானின் படையெடுப்புக் காலத்தில் வேலூர் கோட்டையும் ஜலகண்டேஸ்வரர் கோயிலும் முஸ்லிம்கள் வசம் வந்தன . கோயில் சூறையாடப்பட்டது . சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்டன . கருவறையில் இருந்த லிங்கம் பெயர்த்தெடுக்கப்பட்டு பாலாற்றில் வீசி எறியப்பட்டது . சத்துவாச்சாரியைச் சேர்ந்த துணிவுமிக்க பக்தர்கள் சிலர் சிவலிங்கத்தைக் கண்டெடுத்து , தங்கள் பகுதிக்கு எடுத்துச் சென்று , சிறிய கோயிலைக் கட்டி பக்தியுடன் வழிபாடு செய்து வந்தனர் . அதன் பின்பு வந்த வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்திலும் அதே நிலை நீடித்தது ..
கோட்டை... படைவீரர்களின் கொத்தளமாகவும், ஆலயம்...குதிரை லாயமாகவும், வெடிமருந்து கிடங்காகவும் , பயன்படுத்தப்பட்டன . நாடு சுதந்திரம் பெற்ற பின்பு கோட்டைக் கோயிலை மீட்க வேலூர் நகரத்தைச் சேர்ந்த பெரியோர்களால் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டது . இப்போது இந்து முன்னணி அறிவித்துள்ள போராட்டம் அத்தகைய பெரும் முயற்சிகளின் தொடர்ச்சியே ஆகும் .
நாங்கள் இப்போது முடிவாக சொல்லுகின்றோம் . கோட்டை கோயிலில் சாமியை பிரதிஷ்டை செய்ய அரசும் , தொல்பொருள் இலாக்காவும் அனுமதிக்க வேண்டும் . அப்படி அனுமதிக்காவிட்டால் , எத்தகைய எதிர்ப்புகளையும் தடைகளையும் மீறி கோயிலில் சாமியை வைத்தே தீருவோம் “ என்று ஆணித்தரமாகவும் , உறுதியாகவும் இராம . கோபாலன் அவர்கள் பேசினார்கள் . கோட்டை கோயிலை மீண்டும் வழிபாட்டிற்குக் கொண்டுவர செய்த முயற்சிகளில் , திருமுருக . கிருபானந்த வாரியார் சுவாமிகள் செய்த முயற்சி வேலூர் வரலாற்றில் என்றும் நினைவுகூரத் தக்கது .
வேலூர் பொதுமக்கள் அப்போது ஒரு லட்ச ரூபாயை நிதியாகத் திரட்டி வாரியார் சுவாமிகளிடம் ஒப்படைத்தனர் . வாரியார் அவர்கள் டெல்லி சென்று பல நாட்கள் தங்கியிருந்து , அப்போதைய பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களையும் , மத்திய கல்வி மற்றும் தொல்பொருள் இலாகா அமைச்சரையும் சந்தித்து மத்திய அரசின் அனுமதியைப் பெற தீவிர முயற்சி செய்தார் . ஆனால் மத்திய அரசோ வாரியாரின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வில்லை . வாரியார் சுவாமிகள் வருத்தமுடன் ஊர் திரும்பினார் .
மக்கள் கொடுத்த பணம் ஒரு லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் . அந்தப் பணத்தைக் கொண்டுதான் வேலூர் டோல்கேட் அருகில் இருக்கும் வாரியார் மண்டபம் கட்டப்பட்டது . 1981 ஜனவரி மாதம் கோட்டை மைதானத்தில் இராம . கோபாலன் பேசிய கருத்துக்கள் காவல்துறை மூலம் பதிவு செய்து மாவட்ட ஆட்சியர் கங்கப்பா அவர்களிடம் கொடுக்கப்பட்டது . அவர் இந்தப் பேச்சைக் கேட்டுவிட்டு , “ யார் இந்த இராம . கோபாலன் , வீரபாகு , அவர்களை அழைத்து வாருங்கள் “ என்றார் . இராம . கோபாலன் அவர்களோ தன்னுடைய சுற்றுப்பயணத்தில் திட்டமிட்டபடி பொதுக்கூட்ட நிகழ்ச்சி முடிந்தவுடன் இரவில் வேறொரு ஊருக்கு பயணமானார் .
அன்று வீரபாகு மட்டுமே மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தார் . அப்போது ஆட்சியர் அறையில் இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை . ‘ ‘ சாமியை நீங்கள் வைத்துவிட முடியுமா ? “ என்று ஆட்சியர் கேள்வி எழுப்பினார் . வீரபாகு உறுதியுடன் “ மக்கள் ஆதரவுடன் வைத்துவிடுவோம் “ என்றார் . பின்பு 1981 பிப்ரவரி மாதத்தில் இராம . கோபாலன் , மாவட்ட ஆட்சியர் சந்திப்பு நடந்தது . வேலூர் கோட்டையில் சாமி பிரதிஷ்டை செய்வது பற்றி மாவட்ட ஆட்சியருடன் இராம . கோபாலன் கருத்து பரிமாற்றம் செய்துகொண்டார் .
1981 மார்ச் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் வீரபாகு அவர்கள் ஆட்சியரை சந்தித்தார் . தெருவில் தூக்கும் மண்டித் மூட்டைத் தொழிலாளர்கள் 50 க்கும் மேற்பட்டோரை வீரபாகு சந்தித்துப் பேசி அவர்களை தயார் நிலையில் வைத்திருந்தார் . ஆனால் ஜலகண்டேஸ்வரர் ஆலயமோ சமூக விரோதிகள் கூடாரமாகத் திகழ்ந்தது . அங்கே அனைத்து அயோக்கியத்தனங்களும் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தன.
மயிலை குருஜி சுந்தர்ராம் சுவாமிகள் கோட்டைக்குள் ரகசியமாகச் சென்று , ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தூணில் இருந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்தார் . லிங்க பிரதிஷ்டை காரியம் வெற்றிகரமாக நடைபெற பிரார்த்தனை செய்து கொண்டார் . ரகசிய திட்டங்களின்படி மார்ச் 13 ந் தேதி இரவு ஆலய பிரகாரத் திற்குள் மண்டிக்கிடந்த குப்பைகள் , கழிவுப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன . 15.3.1981 ஞாயிறு இரவு 12.00 மணி அளவில் சத்துவாச்சாரியில் சுவாமி கிருபானந்த வாரியாரின் பக்தர்களான திரு . கே.எஸ் . மணி முதலியார் , ஏ.எஸ்.ஏ பேக்கரி உரிமையாளர் பரமசிவம் மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த வெல்லமண்டி புலாபாய் தேசாய் , ராதாகிருஷ்ண நாயுடு , வேலூர் விபாக் பிரச்சாரக் திரு . ம . வீரபாகு ஆகியோரின் தலைமையில் சுமார் 50 ஹிந்து இளைஞர்கள் திரண்டனர் .
400 ஆண்டுக் காலமாக சத்துவாச்சாரியில் ஊர் மக்களால் பூஜிக்கப்பட்டு வந்த சிவலிங்கத்தை அப்புறப்படுத்த அவ்வூர் மக்கள் ஒத்துக்கொள்ளவில்லை . பிறகு திரு . மணி முதலியார் மற்றும் அன்றைய ஆர்.எஸ்.எஸ் நகர் சங்கசாலக்காக இருந்த திரு . ஏழை . அ . முனுசாமி அவர்களும் ஊர்மக்களைச் சந்தித்து சமாதானப்படுத்தினர் . “ கோட்டையில் சுவாமி பிரதிஷ்டை செய்யப்படுவது ஹிந்து வரலாற்றில் சாதாரணமான நிகழ்வு அல்ல . பாரத நாட்டிற்கே இதன் மூலம் எழுச்சியும் தன்னம்பிக்கையும் பிறக்கும் . வேலூரின் ஹிந்து வரலாற்றில் அழிக்க இயலாத தீரமிகு சம்பவமாக இது அமையப்போகிறது . அந்த பொன் வரலாற்றில் சத்துவாச்சாரியின் பெயரும் இடம் பெறும் “ என்றெல்லாம் எடுத்துக்கூறி , ஊர் பெரியவர்களின் முழு ஒத்துழைப்பை பெற்றார்கள் .
மயிலை குருஜியின் தலைமையில் லிங்கத்தை பெயர்த்தெடுத்தார்கள் . ஆனால் லிங்கத்தை அவ்வளவு சுலபத்தில் பெயர்த்தெடுக்க முடியவில்லை . மயிலை குருஜி சுவாமிகளோ மனமுருகி பிரார்த்தனை செய்து தன் தலையில் தேங்காய் உடைத்தார்கள் . அதன் பின்பு சில நிமிடங்களில் லிங்கம் , பீடம் , ஆவுடையார் என மூன்றாகப் பிரித்து எடுக்கப்பட்டது . லாரியில் ஏற்றி வேலூர் கோட்டைக்கு எடுத்துச் செல்லும் போது விடியற்காலை மணி 4.00 ஆகிவிட்டது . விடிந்தால் திங்கட்கிழமை . காலை 7.30 மணி முதல் 9.00 மணிவரை ராகு காலம் . அதன் பின்புதான் லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முடியும் . தொல்பொருள் இலாகாவும் , காவல் துறையும் தடுத்து நிறுத்தினால் , அதையும் மீறி லிங்கத்தை கோயிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்ய வேண்டுமானால் , வெறும் 50 நபர்களால் மட்டும் முடியாது . இதை முன்கூட்டியே உணர்ந்திருந்த திரு . ம . வீரபாகு அவர்கள் ஞாயிறு இரவு 1 மணியளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட RSS பொறுப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு காதோடு காது வைத்தாற்போன்று வீட்டின் கதவைத் தட்டி ரகசிய செய்தி அனுப்பினார் .
அச்செய்தியின்படி திங்கட்கிழமை விடியற்காலை 5.30 மணி அளவில் வேலூர் கோட்டைக்குள் யாரும் எளிதில் தெரிந்து கொள்ள முடியாத இடத்தில் அனைவரும் ஒன்றுகூடச் செய்தார் . இறை வழிபாட்டிற்கு பிறகு தொண்டர்களுக்கு கடந்த சில தினங்களாக நடைபெற்ற சம்பவங்கள் , ரகசியத் திட்டங்கள் பற்றி விளக்கப்பட்டன . அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம் ஏற்பட்டது . அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய குறிப்புகள் வழங்கப்பட்டன . அன்றைய தினம் தொழில் மற்றும் பணிக்கு விடுப்பு எடுத்துக்கொள்ளும்படி ஊழியர்களுக்கு கட்டளை இடப்பட்டது . வீட்டுக்கு திரும்பிச் சென்று , தனிப்பட்ட ஒவ்வொருவரும் 10 முதல் 20 நபர்களை ரகசியமாக திரட்டிக்கொண்டு கோட்டைக் கோயில் வாசலில் சரியாக 9 மணிக்கு அணிதிரள வேண்டும் . காவல் துறை , தொல்பொருள் இலாகா எதிர்ப்புகளை மீறி லிங்கத்தை எதிர்ப்புகளை மீறி உயிர்கொடுத்தேனும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று திரு . ம . வீரபாகு அவர்கள் ஆவேசமாகப் பேசினார் .
ஸ்வயம் சேவகர்கள் தன் வாழ்நாளில் கிடைத்த பெரும் பேறாக கருதி , மிகுந்த உற்சாகத்துடன் கலைந்து சென்றனர் . திட்டமிட்டபடி காலை 9 மணி சுமாருக்கு 3,000 த்திற்கு மேற்பட்ட ஹிந்து பக்தர்கள் ஒன்று கூடிவிட்டனர் . ‘ ஹரஹர மகாதேவ ‘ என்ற கோஷத்துடன் பக்தர்கள் லாரியில் வைக்கப்பட்டிருந்த லிங்கத்தை கருவறைக்குள் எடுத்துச் சென்றனர் .
மயிலை குருஜி சுந்தர்ராம் சுவாமிகள் அவர்களால் பிரதிஷ்டைக்கான பூஜைகளும் சடங்குகளும் செய்யப்பட்டன . ( மண்டித்தெருவைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள் ஞாயிறு இரவு ரகசியமாக கோட்டைக்குள் நுழைந்து , கோயிலின் பிரதான வாயில் , உட்புற கதவுகள் மற்றும் கருவறைக் கதவுகளின் பூட்டுக்களை உடைத்து தயார் நிலையில் வைத்திருந்தக் காரணத்தினால் , லிங்கத்தை கருவறைக்குள் எளிதில் கொண்டு செல்ல முடிந்தது ) பிரதிஷ்டைக்கான வேலைகள் கருவறையில் நடந்துகொண்டு இருக்கும்போதே , கோயில் வளாகத்தில் , ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது . வால்போஸ்டர்கள் , ஆட்டோ மூலம் பிரச்சாரம் , கோயிலில் குடிதண்ணீர் ஏற்பாடு மற்றும் தரிசனத்திற்காக வரும் பக்தர்களை ஒழுங்குபடுத்துதல் வேலைகள் திட்டமிடப்பட்டு பிரித்துக் கொடுக்கப்பட்டன . ஏற்றுக்கொண்ட வேலைகளை கனகச்சிதமாக நிறைவேற்றினர் .
வால்போஸ்டர்கள் தயாரிக்கப்பட்டு அனைத்துப் பேருந்துகளிலும் ஒட்டப்பட்டன . வேலூர் நகரில் ஆட்டோக்கள் மூலம் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் லிங்கம் பிரதிஷ்டையான செய்தி ஒலிபரப்பாகியது . திருப்பத்தூர் முதல் வந்தவாசி வரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிக்கும் வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டு விட்டார் . வழிபாடு செய்ய வாரீர் ‘ ‘ என்ற செய்தி பரப்பப்பட்டது . செய்தி தெரிந்தவுடன் விடிய விடிய பக்தர்கள் ஆயிரக்கணக்கில் ஜலகண்டேஸ்வரரை தரிசனம் செய்ய குவிந்த வண்ணம் இருந்தனர் .
காலை 11.00 மணியளவில் வழக்கம்போல கோட்டை துறை அலுவலகத்திற்கு வந்த தொல்பொருள் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது . காவல்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார்கள் . அதன்பின்பு எஸ்.பி.யை நேரில் சந்தித்தும் புகார் கொடுத்தார்கள் . தொல்பொருள் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் ஹிந்துக்கள் சாமியை வைக்கிறார்கள் . அதை மீட்டுக் கொடுங்கள் ‘ என்று புகார் கொடுத்தார்கள் . முதல் நாளே திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலுள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த மாவட்ட ஆட்சியர் கங்கப்பா அவர்கள் காலை 9.00 மணியளவில் வேலூர் வந்து சேர்ந்தார் .
கேம்ப் ஆபிஸில் இருந்தபடியே சம்பவத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார் . தொல்பொருள் துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் கோயிலில் பக்தர்கள் கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தடியடி நடத்த முயற்சித்தபோது , மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்தினார் . “ பல்லாயிரக்கணக்கில் மக்கள் குழுமிவிட்டனர் . இப்போது தடியடி செய்தால் சட்ட ஒழுங்கு பிரச்சினை உருவாகும் “ என்றார் . அதனால் காவல்துறையால் ஏதும் செய்ய முடியாமல் போனது . வேலூரில் நடைபெறும் ஹிந்துக்களின் எழுச்சிப் பற்றியும் கோட்டை கோயிலில் லிங்கம் பிரதிஷ்டை ஆவது பற்றியும் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் . அவர்களுக்கு காவல்துறை மூலம் செய்தி அனுப்பப்பட்டது . தகவல் அறிந்த எம்.ஜி.ஆர் . அவர்கள் உள்ளூர மகிழ்ச்சி அடைந்தார் . லிங்கம் பிரதிஷ்டைசெய்யப்படுவதற்கு எந்த இடையூறும் ஏற்படுத்த வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
லிங்கம் பிரதிஷ்டை முழுமையாக நிறைவேற மாலை 3.00 மணிக்குமேல் ஆகியது . பின்னாட்களில் , மதுரையில் நடைபெற்ற இரண்டாவது உலக தமிழ் மாநாட்டின் போது , எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட அருள்மிகு சோமசுந்தர பெருமான் நினைவுப் பரிசை வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு காணிக்கையாக அளித்தார் . அதை இன்றும் கோட்டை கோயில் வளாகத்தில் காணலாம் . ஏப்ரல் 5 ஆம் தேதி , வேலூர் கோட்டை மைதானத்தில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் பிரதிஷ்டை வெற்றிவிழா கொண்டாடப்பட்டது .
அதில் திரு . தாணுலிங்க நாடார் , திரு . இராம . கோபாலன் , அரக்கோணத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி ஹரிஜன பிரிவு தலைவர் வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர் . அன்று எம்.ஜி.ஆரின் அமைச்சர் அவையில் இடம்பெற்றிருந்த திரு . விஸ்வநாதன் ( அ.தி.மு.க ) அவர்கள் , எம்.ஜி.ஆரின் அனுமதியின் பேரில் , வெற்றிவிழா கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றார் .
அன்று கோட்டை மைதானம் விழாக் கோலம் பூண்டிருந்தது . மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது . கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஜலகண்டேஸ்வரர் ஆலய நிர்வாகத்தை வேலூர் நகர ஸ்வயம் சேவகர்களே நடத்தி வந்தனர் . அதன் பிறகு முறைப்படி நிர்வாகம் ஊர் பெரியவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது . கோயில் நிர்வாகக் கமிட்டி அமைக்கப்பட்டு , அதில் வேலூர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் திரு . ஏழை . அ . முனுசாமி அவர்கள் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார் . அன்று முதல் இந்நாள் வரை திரு , ஏழை . அ . முனுசாமி அவர்கள் கோயில் நிர்வாகக் கமிட்டியில் அங்கம் வகித்து கோயிலின் வளர்ச்சிக்கு தொண்டு புரிந்து வருகிறார் . இந்தப் புண்ணிய காரியத்திற்கு மூல காரணமாக இருந்து ஹிந்து சமுதாயத்திற்கு நம்பிக்கை கொடுத்தது இந்துமுன்னணி.
மதுரை வெற்றிச் செய்திகள்:
1981ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டிற்காக ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் ரிஷப வாகனம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சித்திரை திருவிழா முடிந்த பின்னரும் வாகனம் திரும்பியப் பாடியில்லை. இதனைக் கண்டித்து திருக்கோயில் வாசல் காந்தி மண்டபம் முன்பு திரு.கோபால்ஜி தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. மறு நாள் வாகனம் கோயில் வந்து சேர்ந்தது.
மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி உறசவம் வெகுவிமர்சையாக நடைபெறும். இவ்விழாவில் ஆடிவீதியில் கோயில் இடத்தில் சினிமாக்காரர்களின் குத்துப்பாட்டு. ஆபாச ரெக்கார்ட் ஆட்டங்களும் போட்ட நிலையில். இந்து முன்னணி எதிர்த்து போராடியாதை அடுத்து. நிர்வாகம் குத்தாட்டத்தை நிறுத்தி பக்திப் பாடல்களுக்கு மட்டும் அனுமதி அளித்தது.
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி நடைபாதை கடைகள், வாகனப் போக்குவரத்தால் பக்தர்கள் செல்ல முடியாத நிலை இருந்ததை இந்து முன்னணி தொடர்ந்து குரல் கொடுத்ததை அடுத்து, கடைகள் அகற்றப்பட்டன. காலப்போக்கில் போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டது.
1981ஆம் ஆண்டு கலையழகு கொஞ்சும் புதுமண்டப(வசந்த மண்டபம்)த்தின் முன் அழகை மறைத்து கடைகள் கட்ட எடுத்த முயற்சியை இந்து முன்னணி முறியடித்தது.
மதுரையின் மையப் பகுதியான சிம்மக்கல் 20அடி உயர விநாயகர் கோயில் இந்து விரோத அதிகாரிகள் தூண்டுதலால், மாநாகராட்சியால் இடிக்க முற்பட்டத்தைக் கண்டு இந்து முன்னணி களத்தில் இறங்கிப் போராடியதால் முறியடிக்கப்பட்டது. இப்போதும் விநாயகர் கம்பீரமாய் காட்சி தருகிறார். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஆட்சியாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தள்ளிப்போட நடந்த சதியை இந்து முன்னணி எதிர்த்து குரல் கொடுத்த காரணத்தால், கும்பாபிஷேகம் திட்டமிட்ட காலத்தில் நடைபெற்றது.
மதுரை வைகையாற்றிலிருந்து மீனாட்சி அம்மன் அபிஷேக தீர்த்தம் ஆலய நிர்வாகத்தின் சோம்பேறித்தனத்தால் நிறுத்தப்பட்டது. இந்து முன்னணியின் தலை யீட்டால் இன்றும் அன்னைக்கு வைகை தீர்த்த அபிஷேகம் நடைபெற்று வருகிறது. மீனாட்சி அம்மன் ஆயிரம் கால் மண்டபம் பாழடைந்த நிலையை மாற்றி பக்தர்களின் பார்வைக்கு வர இந்து முன்னணியின் முயற்சி காரணம் ஆகும்.
மீனாட்சிபுரம்
1981-ல் தமிழத்தில் நெல்லை மாவட்டத்திற்கு அருகில் உள்ள மீனாட்சிபுரம் . இந்து தேவேந்திர குல வேளாளார் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை முஸ்லிம்களாக மாற்ற பெரும் சதித் திட்டம் தீட்டப்பட்டது. மீனாட்சிபுரம் என்ற ஊரை ரஹமத் நகர் என்ற மாற்றவும் சதி திட்டம் தீட்டப்பட்டது. இதை இந்து முன்னணி சார்பாக சமுதாயத் தலைவர்களையும், ஆன்மீகத் தலைவர்களையும் அழைத்து ரஹமத் நகரை மீண்டும் மீனாட்சிபுரமாக மாற்றினார்கள். அங்கு மத நல்லிணக்கம் ஏற்பட்டது. மனச்சாட்சியின் அடிப்படையில் மதமாற்றம் ஏற்படக்கூடும். ஆனால் ஒரேயடியாக நூற்றுக்கணக்கானவர்கள் மேளதாளத்துடன் மதம் மாற்றப்படுவது உண்மையான மதமாற்றமாக இருக்க முடியாது. தனிநபர் தனிமையில் யோசித்துத் தீர்மானிக்க வேண்டிய விஷயம் கூட்டத்தினர் ஏற்படுத்தும் குழப்பத்தில் இயலாத காரியம். ஆகவே அது சுதந்திரமான மதமாற்றமாகாது. மனம் மாறாத மத மாற்றமா?
அன்று மதமாற்றம் நடத்த ஏராளமான பணமும், கவர்ச்சிகள் வெகுமதிகளும் கையாளப்பட்டுள்ளன. மேலும் அவ்விழாவில் மத்திய சர்க்கார் பார்லிமெண்ட் அங்கத்தினரும், மாகாண சர்க்கார் சட்டமன்ற உறுப்பினரும் பங்கெடுத்துக் கொண்டனர். இருவரும் முஸ்லீம் மதத்தினர்களாக இருந்துள்ளனர். இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு செயல் எனக்கூற இடமளிக்கிறது. ஒவ்வொரு ஹரிஜன நபருக்கும் ரூ.500/- வீதம் மதம் மாறுவதற்காக அளிக்கப்பட்டது என மதம் மாற விரும்பாத ஐயப்பன் என்ற நபர் கூறியிருப்பது காண்க. இவ்வித மதமாற்றத்தால் ஏற்படக்கூடிய விபரீத விளைவை தற்சமயம் உலக அரங்கில் காணப்படும் இஸ்லாமிய மதவெறிக்கிளர்ச்சியின் பின்னணியில் காண வேண்டும். ஐரோப்பியாவில் உள்ள முஸ்லிம் வல்லரசுகளிடையே காணப்பட்டு வரும் இஸ்லாமிக் ஃபண்டமேண்டளிசம் என்ற புதுக் கொள்ளையின் விபரீத நிலையை இன்று ஈரான் நாட்டில் காண்கிறோம். இந்நிலை கண்டு உலகத்தின் பெரிய வல்லரசுகளான ரஷியாவும், அமெரிக்காவுமே கவலை கொண்டவர்களாக உள்ளனர். அப்படியிருக்க பாரதநாடு அதிக கவலை கொள்வதில் அதிசயம் யாதுமில்லை.
இவ்வித மத மாற்றங்கள் பாரதத்தின் உள்நாட்டு அரசியல் ஆட்சி நிலையை மட்டுமின்றி அகில உலக அரசு அதிகார நிலைகளையும் பாதிக்கவல்லது என்பதை மறுக்க முடியாது. மேற்கு ஐரோப்பா இஸ்லாமிய வல்லரசுகளுக்கும் , கிழக்கு ஆசிய இஸ்லாமிய நாடுகளாகிய இந்தோனேசியா, மலேசியா நாடுகளுக்கும் இடையே பாரத தேசம் இஸ்லாம் அல்லாத ஒரு ஹிந்து நாடாக உள்ளது. பிறைச் சந்திரன் போன்ற இப்பகுதியில் இஸ்லாமியர்கள் பாரத நாட்டை ஓர் இடைஞ்சலாகவே கருதக்கூடும். இதை அகற்றவே இம்மாதிரியான மத மாற்றம் ஏற்பட்டுவிட்டால் பாரத ஹிந்து சமுதாயத்தின் கதி என்ன ஆகும். தங்கள் நாட்டிலேயே தாங்கள் அகதிகள் என்ற நிலை தான் வரும்.
மீனாட்சிபுரத்தில் யாவரும் மதித்து வந்த ஆசிரியரான பள்ளி ஆசிரியார் ராஜைய்யா இஸ்லாமியராக மாறி இப்ராஹீம் ஆகியுள்ளார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜூன் 26 செய்திப்படி மதம் மாறியவர்களிடையே அவர் பேசியதாவது. நாம் இனி கு.க.திட்டத்தை ஆதரிப்பவர்கள் அல்ல. நம் நாட்டில் இத்திட்டம் பயனளிக்கவல்லது என்பதற்கு போதிய அத்தாட்சி இல்லை. சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு பெரிய குடும்பங்களே விரும்பத்தக்கது என்று கூறியுள்ளார். இந்தப்போக்கு நீடிப்பதைக் காணும் ஹிந்துக்கள் பேசாமலிருக்க முடியுமா? ஏற்கனவே கு.க.திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஹிந்து சமூகத்தினரே. வடகிழக்கு ராஜ்யப் பிரிவுகள், கேரளா போன்ற இடங்களில் ஹிந்துக்கள் பெரும்பான்மை நிலைக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. ஆகவே அவர்களும் இத்திட்டத்தை ஆதரிக்க முடியாத நிலைதான் ஏற்படக்கூடும். தாங்கள் பாரதத்தின் பல பகுதிகளில் ஹிந்துக்களைக் காட்டிலும் மெஜாரிட்டி நிலை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் முஸ்லீம்கள் செயல்படுவதை ஹிந்துக்கள் எவ்வாறு கண்காணிக்காமல் இருக்க முடியும் .
முப்பது வருஷங்களுக்கு முன் பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்ததன் காரணம் என்ன என்பதை நினைவு கூறுவோம். ஒரு நாட்டின் அமைப்பிற்கு மதமே அடிப்படை என்ற கொள்ளையில் தோன்றியதே அந்த நாடு. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த பாரதத்தின் பெரும்பகுதிகள் தான் இன்று பாகிஸ்தானாகவும், பங்களாதேஷாகவும் காட்சியளிக்கின்றன. இதேபோல் பாரதம் முஸ்லிம் பெரும்பான்மை நிலை பெற்றால் பாரதம் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெறும்.
பின்னர் இன்று பாகிஸ்தானில் காணப்படும் இஸ்லாமிய மதக்கோட்பாட்டின் படி அரசியல் சட்டங்கள் என்ற நிலை தலையெடுக்கும். அப்பொழுது பாரதீய ஹிந்துக்கள் நிலை என்னாவது? இஸ்லாம் வகுப்பை சேர்ந்த அகமதியர்களோ, பாகிஸ்தானில் முஸ்லிம்களாக கருதப்படாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஹிந்துக்களைப் பற்றி சொல்வானேன் .எல்லாரும் காஃபிர்களே – அதாவது இஸ்லாமின் விரோதிகளே என்ற பட்டம் பெறுவார்கள் அல்லவா?? ஆகவே மதசார்பற்ற நிலை என்ற தெளிவற்ற ஓர் கொள்கை எந்த நிலைக்கு பாரதீய ஹிந்துக்களை இழுத்துச் செல்ல உள்ளது என்பதை நாட்டுப் பற்றுள்ளவர்கள்சிந்திக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. அராபிய கல்ஃபு நாடுகளின் பணபலம் மதமாற்றத்திற்கு இன்று பயன்படுத்தப்படுவது போல, நாளை அதே பணம் பாரதீய மக்களின் நாட்டுப்பற்றையும் , குறிப்பாக அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளின் நாட்டுப்பற்றையும் , விலைக்கு வாங்கி விடாதா? ஆகவே தக்க தருணத்தில் உஷாராக இருக்க வேண்டியது நம் நாட்டின் அரசியல்வாதிகளின் பொறுப்பாக உள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஹிந்துக்கள் எல்லோரும் தங்களின் நிலையைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும். ஹிந்து சமயத்தலைவர்கள் யாவரும் வரவிருக்கும் புரட்சிநிலையைத் தவிர்க்க உடனே வழிகான வேண்டும். ஹிந்து தர்மசாஸ்திரங்கள் கூறாத பழக்கவழக்கத்தில் தோன்றியுள்ள தீண்டாமை நியதிகள் , உடனே கைவிடப்பட வேண்டும்.
நாகர்கோவில் வரலாறு காணாத ஹிந்து எழுச்சி! தமிழகத்தின் வரலாற்றிலேயே ஒரு புதிய அத்தியாத்தைப் படைத்துள்ளது கன்னியாகுமரி மாவட்டம் 1981, பிப்ரவரி 13, 14 தேதிகளில் நாகர்கோயிலில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட ஹிந்து எழுச்சி மாநாடு லட்சக்கணக்கான ஹிந்துக்கள் ஒன்றாகக் கலந்து ஒரு மாபெரும் மக்கள் கடலாக உருவெடுத்தது. மாநாட்டையொட்டி முதல் நாளன்று நடைபெற்ற ஊர்வலம் பூரி ஜகன்னாதர் தேர்த்திருவிழாவை போல் அமைந்தது.
ஹிந்து சமுதாயம் அணிதிரண்டது : தவத்திரு மதுரானந்தம் ஜி சுவாமிகள் மாநாட்டைத் துவக்கி வைத்துள்ளார். மதுரை ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், அமெரிக்க நாட்டைச் சார்ந்த ஹிந்து சுவாமிஜி ஸ்ரீ தந்திரதேவ்,ஹிந்து ஒற்றுமை மையத்தின் மாநில அமைப்பாளர் திரு.இராம கோபாலன் ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர். பல்வேறு ஹிந்து சமய மற்றும் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் ஜாதி வேறுபாடுகள், கட்சி உணர்வுகள் ஆகியவற்றைக் கைவிட்டு ஹிந்து சமுதாயம் ஒன்று, ஹிந்து சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பேராபத்திலிருந்து காக்க வேண்டியது ஒவ்வொருஹிந்துவின் கடமை எனும் உணர்வுடன் லட்சக்கணக்கில் ஹிந்து பெருமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கிறிஸ்தவர்களின் சதித் திட்டம்: மாநாட்டில் தலைமை தாங்கி பேசிய மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தை, கன்னிமேரி மாவட்டமாக பெயர் மாற்றுவதற்கான கிறிஸ்தவர்களின் சதி நடப்பது பற்றி குறிப்பிட்டு ஹிந்து மக்கள் ஒன்றுபட்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஹிந்து சமுதாயத்தின் ஒருமைப்பாட்டிற்கும் நாட்டின் பாதுகாப்பிற்கும் அயராது பாடுபட்டுவரும் ஆர்.எஸ்.எஸ். போன்றஇயக்கங்களுக்கு அரசு அதரவு அளிக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஹிந்து சமயம், சமுதாயத்தினுடைய நலன்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டால் சமயத் தலைவர்கள் நாட்டை வழி நடத்த வேண்டிய நிலை ஏற்படுமென்று அவர் கோரினார். மதுரையிலிருந்து 12 மைல் தூரத்திலுள்ள ஜாரி புதுக்கோட்டை கிராமத்திலுள்ள 100 ஏக்கர் ஆதீன நிலத்தை மதமாற்றத்தை தடுப்பதற்கான ஹிந்து நிதியை உருவாக்க விஸ்வ ஹிந்து பரிஷத் ஸ்தாபனத்திற்கு 50 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு அளிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் அறிவித்தார்.
தாய் மதம் திரும்பிய 11 பெண்கள் உட்பட 32 பேர்களுக்கு சுவாமிகள் மத சம்பந்தமான சடங்குகளை செய்து வைத்தார். ஹிந்து குழந்தைகளை ஹிந்துப் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்புங்கள்: அமெரிக்காவைச் சார்ந்த சுவாமி தந்திரதேவ் பேசுகையில் ஹிந்து கோயில்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாதது குறித்து வருத்தம் தெரிவித்தார். கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் ஆதரவுடன் அமைக்கப்படுகின்ற மதசார்பற்ற அரசு ஹிந்து கோயில்களின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்றார். அவர், கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படுகின்ற ஹிந்து மாணவ, மாணவியரின் ஹிந்து சமய உணர்வு மற்றும் இந்த நாட்டினிடமும், பண்பாட்டிடமும் உள்ள விசுவாசம் ஆகியவற்றை துடைத்து நீக்க திட்டமிட்ட ரீதியில் முயற்சிகள் நடைபெறுகின்றன என்றும், ஹிந்து குழந்தைகளை ஹிந்துக்கள் நடத்தும் பள்ளிகளுக்கே அனுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஹிந்துக்களிடம் அக்கறையுள்ளவர்களுக்கே ஹிந்துவின் ஒட்டு.. ஹிந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் திரு.இராம கோபாலன் பேசுகையில், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் ஒட்டு மொத்த வாக்குகளைப் பெற்று ஆட்சியை கைப்பற்றுவதையே குறிக்கோளாக கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலன்களுக்காக ஹிந்து சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் துரோகமிழைக்க தயங்குவதில்லை. ஆகையினால் ஹிந்துக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான கால கட்டத்தில் ஹிந்து நலனில் அக்கறை உள்ள அரசியல் கட்சிகளுக்கு மட்டும் தான் ஹிந்துக்கள் ஆதரவளிப்பது என்று ஹிந்துக்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஹிந்து ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கவும்.. தென் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளரான திரு. இல. கணேசன் பேசும்போது, ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஹிந்து கோயில்களை மையமாக வைத்து அந்தந்த ஊர்களிலுள்ள ஹிந்துக்கள் ஜாதி பேதமின்றி, உயர்வு தாழ்வின்றி, தினசரி ஒன்று கூடி ஹிந்து ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். கன்னியாகுமரி விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் திரு. பொன்னையா ஐயப்பா அவர்கள் பேசுகையில், ஹிந்து சமுதாயத்தில் இன்று ஒற்றுமை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
டாக்டர் திருமதி. இந்திரா சுரேந்திரன் குத்துவிளக்கை ஏற்றி வைத்து பக்தி பாடல்களைப் பாடினார். மாநாட்டுத் தீர்மானங்கள்: இந்தியாவை ஒரு ஹிந்து நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் என்பது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாகும். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கால்நடைகளை கொண்டு செல்லப்பட்டு அங்கு இறைச்சிக்காக கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும். விவசாயப் பணிக்கு இன்றிமையாத கால்நடைச் செல்வங்களை பாதுகாக்க வேண்டும். என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. வரலாறு காணாத ஊர்வம்: நாகர்கோயிலில் ஹிந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டையொட்டி பிப்ரவரி 13, சனிக்கிழமை அன்று மாபெரும் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. முன்பாக ஊர்வலத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்ட யானை ஓன்று சென்றது. அதில் விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சார்ந்த ஒருவர் காவிக் கொடியை ஏந்திச் சென்றார். ஊர்வலத்தில் நுற்றுக்கணக்கான ஸ்கூட்டர்களும், மோட்டர்களும், சைக்கிள்களும் அணி வகுத்துச் சென்றன. ஊர்வலத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்ட ஜீப்பில் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் இதர மடாலயங்களின் தலைவர்களும் சென்றனர். நன்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் ஹிந்து கடவுள்களின் முழு உருவப் படங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. குழந்தைகள் ஹிந்து புராண புருஷர்களைப் போல் வேடமணிந்து வந்திருந்தனர்.
இந்த பிரம்மாண்டமான ஹிந்து எழுச்சி ஊர்வலமானது, ஓரிடத்தைக் கடப்பதற்கு இரண்டு மணி நேரமாயிற்று. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். ஊர்வலம் ஹிந்து கல்லூரியிலிருந்து புறப்பட்டு, பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக மாநாடு நடைபெறும் நாகராஜ திடலைச் சென்றதைன்தது.