2003 கீதை
2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்த படத்திற்கு கீதை என்று பெயரிடப்பட்டு இருந்தது. ஹிந்துக்களின் புனித நூலான கீதையை ஒரு மசாலா படத்திற்கு பெயராக வைப்பதை கண்டித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அப்படம் புதியகீதை என மாற்றப்பட்டது. நாகை மாவட்டத்தில் அப்படம் வெளியிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் இந்து முன்னணியினர் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2003 பாரதியார் குருகுலம்
நடமாடும் நந்தவனங்கள் குழந்தைகள் . சூழ்நிலை காரணமாக சில குழந்தைகள் எவ்வித ஆதரவும் இன்றி தாய் தந்தையரை இழந்து பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.
இதுபோன்ற குழந்தைகள் சமூக விரோதிகளிடம் சிக்கும் போது, அவர்களும் சமுதாயத்திற்கு எதிராக வளர்க்கப்படுகின்றனர்.
பல சமயங்களில் குழந்தைகள் மதமாற்ற நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்படுகின்றனர் . அவர்கள் மதம் மாற்றப்படுவதன் மூலம் இந்து விரோதிகளாக, தேசத்தின் எதிரி ஆக்கப்படுகின்றனர்.
எனவே அத்தகைய ஆதரவற்ற குழந்தைகளை இந்து சிந்தனையோடு, தேசபக்தர்களாக வளர்க்க வேண்டும் என்பதற்காக 2003 ஆம் ஆண்டு பாரதியார் குருகுலம் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை இந்து முன்னணி சார்பில் திருச்சி பாரத பண்பாட்டு பயிற்சி கல்லூரி வளாகத்தில் 7 மாணவர்களுடன் துவக்கப்பட்டது .
பழங்காலத்தில் குருகுல கல்விமுறை போல அதிகாலை துயிலெழல், யோகா, உடற்பயிற்சி , ஸ்லோகங்கள், பாடல்கள் என ஆன்மிகக் கல்வியும் போதிக்கப்படுவதோடு, அரசு கல்வி மையங்களின் மூலம் பள்ளிக் கல்வியும் போதிக்கப்படுகிறது .
சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ள மாணவர்களை சுய சார்புடையவர்களாக ஆக்கி தேசிய , சமுதாய நீரோட்டத்துடன் அவர்கள் வாழ வகை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
அவர்கள் படித்து முடித்த பின் தேவைக்கேற்ப வேலை வாய்ப்புகளையும் அறக்கட்டளை அமைத்துத் தருகிறது .
பயிற்சி பெற்ற மாணவர்கள் அக்கம்பக்கம் கிராமங்களில் பண்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர்.
இந்த சேவையானது தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு திருப்பூரில் கொடுவாய் அருகே உள்ள இடத்தில் மற்றொரு இல்லம் பாரதியார் குருகுலம் என்ற பெயரில் தமிழ்ச்செல்வன் நினைவு வளாகத்தில் துவக்கப்பட்டது.
வருடந்தோறும் மாணவர்களுக்கான 5 நாள் பயிற்சி முகாம் மூன்று இடங்களில் நடத்தப்படுகின்றது. ஆண்டுதோறும் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் பயன் பெறுகின்றனர் . மேலும் விளக்கு பூஜை, கோ பூஜை போன்ற சிறப்பு நிகழ்வுகளும் வருடந்தோறும் நடத்தப்படுகின்றது .
இந்த இல்லங்களில் பாதயாத்திரை செல்கின்ற பக்தர்களுக்கு இலவசமாக தங்குமிடம் வழங்கப்படுகிறது. பாரதியார் குருகுலம் டிரஸ்ட் சார்பாக ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது .
பள்ளி கட்டணம் கட்ட முடியாத ஏழை குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் வழங்கப்படுகிறது. பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வரும் பாரதியார் குருகுலம் சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை, மலர்ச்சியை அப்பகுதிகளில் ஏற்படுத்தி வருகின்றது.