கோவில்கள் குறித்து பிரதமர் அவர்களின் குற்றச்சாட்டை மறுக்கிறேன் என்ற தமிழக முதல்வருக்கு இந்து முன்னணி விடுக்கும் சில கேள்விகள் - மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை

பாரத பிரதமர் மோடி அவர்கள் தமிழக அரசு ஆலய சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளது என்றதை தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மறுக்கிறார். தமிழக முதல்வர் தான் உண்மையை மறைத்து மக்களை திசைதிருப்ப பார்க்கிறார் என இந்து முன்னணி குற்றம்சாட்டுகிறது... கோவில் இடங்களை ஆக்கிரமிக்கவில்லை என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் 3500 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டதாக கூறுகிறார். கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அனுபவிக்க யார் காரணம்? 3500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அனுபவித்தவர்களிடம் இருந்து தமிழக அரசு குத்தகை, வாடகை எவ்வளவு வசூல் செய்தது? அவர்கள் மீதான சட்ட நடவடிக்கை என்ன? இதனை ஏன் மறைக்கிறீர்கள்? ஆலயப் புனிதம் காக்க, சரியாக பராமரிக்க சென்னை உயர்நீதிமன்றம் 75 வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

 

அதனை நடைமுறை படுத்தாது ஏன்? யாரை காப்பாற்ற...? ஆலய சொத்துக்கள் ஆலய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியும் பள்ளி நடத்துகிறோம், கல்லூரி நடத்துகிறோம் என ஆலய சொத்துக்களைப் பயன்படுத்துவது முறைகேடு தானே? தற்போது கோவில்களின் பெயரால் நடத்தப்படுகின்ற பள்ளி, கல்லூரிகளில் இந்து ஆன்மிக கல்வியா போதிக்கப்படுகிறது? பள்ளி, கல்லூரிகளை நடத்த வேண்டியது அரசு தானே? பல கோவில்களின் சொத்துக்கள் இஸ்லாமிய, கிறித்துவ ஆக்கிரமிப்பில் எப்படி போனது? இந்து சமய அறநிலையத் அதிகாரிகள் துணையால் தானே? குத்தகை, வாடகை பாக்கி என போர்டு வைத்தால் மட்டும் போதாது, முறைகேடாக ஆக்கிரமிக்க துணைபோன அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? இல்லையா? கடந்த ஆட்சியில் சிலை கடத்தல் வழக்கு பலவும் நடந்தது. சிலை கடத்தலுக்குத் துணைபோன இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி வந்ததும் அந்த வழக்குகள் என்னவானது? குற்ற செயலுக்கு துணைபோனதாக சிக்கிய அதிகாரிகள் இப்போது அதிகார பலம் மிக்க அதிகாரிகளாக வலம் வர உங்கள் ஆட்சி தானே அவர்களுக்குத் துணைபோகிறது? இதுவும் ஆலயத்தை சீரழிக்கும் சதியாகத்தானே இருக்கிறது? கொரோனா காலத்தில் தினசரி லட்சக்கணக்கான உணவு பொட்டலங்கள் கோவில் நிதியில் இருந்து செலவு செய்து வழங்கப்பட்டது. ஆனால் அதில் உங்கள் படமும் உங்கள் தந்தையின் படமும் தானே இடம்பெற்றது. கோவில் நிதி செலவு செய்யப்பட்டதை அரசின் செயல்பாடாக காட்டியதும் முறைகேடு தானே? இதுவரை இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கோவில் உண்டியல் நிதியில் இருந்து தரப்படும் ஊழியர் நியமனம், இலவச திருமணம் என தமிழ்நாடு முதல்வர் என்ற முறையில் தாங்கள் தலைமையேற்றபோது அவை எதுவும் கோவிலில் வைத்து நடக்காமல் பார்த்துக் கொண்டது சரியானதா? காசைக்கொட்டி தரும் இந்து கோவிலின் பெயர் வந்துவிடக்கூடாது என்று நீங்களும் உங்கள் கட்சியும் செய்ததாக காட்டிக்கொண்டது சரியா? பல பேருந்து நிலையங்கள், கலெக்டர் அலுவலகங்கள், உழவர் சந்தைகள், ஈ.வெ.ரா. சமத்துவபுர குடியிருப்புகள் என கோவில் சொத்துக்களை இந்து சமய அறநிலையத் துறையின் துணையோடு எந்தவித வாடகையோ, குத்தகையோ தராமல் ஆக்கிரமித்த பட்டியல் எங்களிடம் இருக்கிறது. அரசு ஆக்கிரமிக்க வில்லை என்று பொய் சொல்கிறீர்களே. இந்த இடங்களை எல்லாம் தமிழ்நாடு அரசு எப்போது விடுவித்து தரும் என முதல்வர் அறிவிக்க முடியுமா? இதுவரை கோவில் உண்டியல் மற்றும் வருமானங்களில் தான் குறிப்பிட்ட சதவீதம் நிர்வாக செலவினங்களுக்காக அரசு எடுத்து வந்தது. இப்போது வங்கி டெபாசிட்டு மூலம் வரும் வட்டியிலும் அரசு எடுக்கிறதாம். சமீபமாக கோவில் நிதியில் அதிகாரிகளுக்கு அமைச்சருக்கு புத்தம்புதிய விலையுயர்ந்த கார் வாங்கியும், அதற்கான பெட்ரோல் செலவும் கோவில் கணக்கில் வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? மசூதி சொத்துக்களை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள வக்ஃப் வாரிய செலவு எந்த கணக்கில் வருகிறது என்று கூறுவாரா முதல்வர்? தற்போது மீண்டும் தி.மு.க‌. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சாதி பிரச்சினை என காரணம் காட்டி பல கோவில்கள் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதே. இது தான் தமிழ்நாடு அரசின் சமூக நல்லிணக்க செயல்பாடா? தேவகோட்டை கண்டதேவி கிராம சொர்ணமூர்த்தீஸ்வரர் தேரோட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டு இருக்கிறது தெரியுமா? சமூக நல்லிணக்கம் ஏற்படுத்தி கோவில் வழிபாடு, விழாக்கள் நடத்துவதுதானே நல்ல அரசின் செயல்பாடு? ஆனால் உங்கள் அரசு கோவில் வழிபாட்டை, விழாக்களை தடுத்து, பூட்டு போட்டு சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறது ஏன்! ஏதேதோ காரணங்கள் கூறி நூற்றுக்கணக்கான கோவில்களை இடித்தது உங்கள் அரசுதான். அதே காரணங்களுக்காக வேற்று மதத்தினர் வழிபாட்டு இடங்களோ அரசு கட்டிடங்களோ இடிக்கப்பட்டதா? மாற்று இடமோ தக்க ஏற்பாடோ இல்லாமல் குப்பையை போல கோவில்கள் அகற்றப்பட்டதை மறுக்க முடியுமா? பல கோவில்களில் அத்துமீறி நுழைந்து சுவாமி விக்ரகங்கள் உடைக்கப்பட்டன. உடைத்த குற்றவாளிகளில் சிலர் கையும் களவுமாக பிடிபட்டாலும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என விடுவிக்கப்பட்ட அதிசயம் உங்கள் ஆட்சியில் தான் நடந்தது? தங்க பிஸ்கட் தயாரிப்பு பெரிய மோசடி திட்டம் எனக் கூறப்படுகிறது. உருக்கிய தங்க நகைகளில் இருந்த செம்பு, விலை உயர்ந்த கல், பவளம், வைரம், வைடூரியம் கணக்கு என்ன? இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்து முன்னணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதில் ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை? திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இந்து சமய நிகழ்ச்சிகளுக்கு பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தருமை ஆதினம் பட்டினபிரவேசம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் விழாவின் போது நடக்கும் இந்து சமய மாநாட்டிற்கு இடைஞ்சல், 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் எழுமலை முத்தாலம்மன் திருவிழா என எத்தனை இடையூறுகள்? சில மணிநேர பயிற்சியில் கிரஷ்கோர்ஸ் நடத்தி ஓதுவார் பணி நியமன ஆணை என்ற வேடிக்கை விநோத நடவடிக்கை குறித்து தர்மபுரம் ஆதீனம் வேதனை தெரிவித்தார். தேவார திருவாசக பயிற்சியில் மட்டுமா அரசியல் செய்தீர்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்றும் பெண் அர்ச்சகர் நியமனம் என்றும் திராவிட விசுவாசிகளை உள்ளே நுழைக்கவில்லையா? பல்லாயிரம் கோவில்களில் ஒருகால பூஜைகூட நடைபெறவில்லை. விளக்கு கூட இல்லை. அந்தக் கோவில்களின் பராமரிப்பு குறித்து உங்கள் ஆட்சியின் கீழ் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை கவலைப்படவில்லையே ஏன்? அதே சமயம் பல கோடி வருமானம் வரும் சில நூறு கோவிலையும் அழிக்கும் வேலையை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது பற்றி ‌என்ன சொல்கிறீர்கள்? கோவில்களை அதிகாரிகள் நிர்வகிக்கக்கூடாது, அறங்காவலர்கள் தான் நிர்வகிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு உள்ளது. ஆனால் இதுவரை அறங்காவலர்கள் நியமனம் பற்றிய எந்த தகவலும் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஏன்? நியமிக்கப்பட்டவர்கள் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. இதுவும் ஒருவகையில் ஊழல் தானே? சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து உபயதாரர்கள் மூலம் 750 கோடி நன்கொடை வந்ததாக பெருமையாக கூறியுள்ளார். ஆனால் திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கோவில் வளர்ச்சிக்கு அரசு நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாயை எப்போது தருவீர்கள்? எனவே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மையானது தான் என்பது தமிழர்களுக்கு நன்கு புரியும். எனவே தமிழக கோவில்கள் பாதுகாப்பாக உள்ளன என பெருமை பேசாமல் முதல்வர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையில் நடக்கும் ஊழல், முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அரசுத்துறை ஆக்கிரமித்து உள்ள ஆலய சொத்துக்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது. தமிழக மக்கள் மறக்கவில்லை முதல்வரே! அந்த அளவு பாதுகாப்பாக கோவில்கள் உள்ளன என பெருமை வேறு பேசுகிறீர்கள்.

Read More