அவிநாசி அருகே பெருமாள் கோவிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை ! மூன்று கோவில்களில் கொள்ளை முயற்சி! கோவில்களில் தொடரும் அவலம் ! தமிழக அரசு கோவில்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது ! மாநிலத் தலைவர் காடேஸ்வரா C சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை

நேற்று அவிநாசி அருகே உள்ள பெருமாள் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதேபோல அதற்கு அருகிலேயே உள்ள நடுவச்சேரி இந்து சமய அறநிலையதுறைக்கு சொந்தமான அங்காளம்மன் மாகளிம்மன் கோவில், தனியார் கோவிலான பேச்சி அம்மன் கோவில், துலுக்க முத்தூர் மாகாளியம்மன் கோவில் போன்றவற்றிலும் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். துலுக்க முத்தூர் மாகாளியம்மன் கோவிலில் நட்டு வைத்திருந்த சூலாயுதம் மற்றும் வேலை கொண்டு கோவில் கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். சூலாயுதம் கதவின் இடுக்கில் சிக்கியதால் கொள்ளை சம்பவம் அரங்கேறவில்லை. இந்த நான்கு கோவில்களிலும் கைவரிசை காட்டிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். தி.மு.கவின் கடந்த மூன்று ஆண்டுகால

 

ஆட்சியில் கோவில்களில் திருட்டுப் போவதும் கோவில் விகரகங்கள் உடைக்கப்படுவதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. கோயில்களை பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறையும் கோவில்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்துவதில்லை. தனியார் கோவில்களில் கொள்ளை அடிக்க பட்டாலும் கோவில்கள் சூறையாடப்பட்டாலும் அதில் குற்றவாளிகளை பிடிப்பதில்லை. அப்படியே பிடித்தாலும் அவர்கள் மனநோயாளிகளாக மாறி விடுகின்றனர். கடந்த மே மாதம் 23ஆம் தேதி இதே அவிநாசியில் பெரிய கோவிலில் ஒருவன் இரவு முழுக்க தங்கி இருந்து 63 நாயன்மார்கள் சிலையை சேதப்படுத்தினான். அவனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவனை மனநோயாளி என்று காவல்துறை பதிவு செய்தது. ஆறு மாதத்திற்கு முன்பு கோவை கோனியம்மன் கோவிலின் ஆதி கோனியம்மன் வாசல் முன்பு இருந்த உண்டியல் காசை ஒருவன் திருடி சென்றான். கோவையில் பிரபலமான கோனியம்மன் கோவிலுக்கே இந்த நிலைமை என்றால் இன்னும் சில சிறிய கோவில்களின் நிலைமை கேள்விக்குறிதான். டிசம்பர் 10ஆம் தேதி அன்று சிறுவாச்சூர் பெரியசாமி கோவில் சிலையின் மீசை பகுதி சேதப்படுத்தப்பட்டது. ஏற்கனவே அந்த பகுதியில் பலமுறை கோவில் சிலைகள் உடைக்கப்பட்டது. அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை மழையின் காரணமாக பெரியசாமி கோவில் சாமி சிலை சேதமடைந்ததாக காரணத்தை கூறியது. இப்படி தமிழகத்தில் பல கோவில்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலால் பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். கோவில் நிர்வாகத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடிய இந்து சமய அறநிலையத்துறை கோவில் பாதுகாப்பு விஷயத்தில் அக்கறையற்று செயல்படுகிறது என்பதையே இது காட்டுகிறது. ஒருபுறம் திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் முழுக்க பல கோவில்கள் இடிக்கப்படுகின்றன. இன்னொரு புறம் கொள்ளைக்காரர்களால் கோவில் உண்டியல்கள் உடைக்கப்படுகின்றன. கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திக அரசு எனக் காட்டிக் கொள்ளும் திமுக அரசு எப்படி கோவிலை பாதுகாக்கும் என்ற கேள்வியே மக்களிடத்தில் எழுந்திருக்கிறது. திருவண்ணாமலையில் 400 ஆண்டு கால அம்மனியம்மாள் மடத்தை இடித்தது, அதே கோவிலில் சாமி ஒவியத்தின் மீது ஓட்டை போட்டு மின்சாதனங்களை பொருத்துவது என அநியாயங்கள் தொடர்கின்றன. மூன்று மாதங்களுக்கு முன்பு திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதர் சாமி கோவிலுக்குள்ளே சாமி பிரகாரம் முன்பு சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றது இதை தட்டி கேட்ட கோவில் அலுவலர் மிரட்டப்பட்டார். பல்வேறு மக்கள் போராட்டத்திற்கு பிறகு அது நிறுத்தி வைக்கப்பட்டது. சனாதன தர்மத்தின் அடையாளங்களாக விளங்கும் கோவில்களை சனாதனத்தை அழிப்பேன் என்று கூறும் திமுக ஆட்சியாளர்களால் எப்படி பாதுகாக்க முடியும். பக்தர்கள் மட்டும் பொதுமக்களால் நிதி திரட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற இருந்த நிலையில் கமிஷன் வராத காரணத்தால் சில கோவில்களின் கும்பாபிஷேகங்கள் கூட நிறுத்தப்பட்டது. சமீபத்தில் நடந்த அன்னூர் கரி வரதராஜா பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒருபுறம் கோவில் இடிப்பு மறுபுறம் கோவில் உண்டியல் கொள்ளை இன்னொரு புறம் அடையாளம் தெரியாத நபர்களால் கோவில்கள் உடைப்பு என இந்து கோவில்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஆளும் திமுக அரசு கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலை சேதப்படுத்துபவர்கள் மீதும் கோவிலை கொள்ளையடிப்பவர்கள் மீதும் கடுமையான வழக்கு பதிவு செய்து இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க ஆவண செய்ய வேண்டுமென இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது.

Read More