விபத்தில் சிக்கும் பக்தர்கள் - பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும் - இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை

இந்துக்களின் பாரம்பரியமான வழிபாட்டு முறையான பாதயாத்திரையாக சென்று இறைவனை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்றுவது என்பது இந்துக்கள் வாழ்நாளில் கடைபிடிக்கும் முக்கியமான இறைப்பணியாகும். அதன்படி திருச்செந்தூர், பழனி, சபரிமலை, சமயபுரம் ஆகிய பகுதிகளுக்கு காவடி, தீர்த்த குடம், இரு முடி எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாக பக்தர்கள் செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக தை மாதம் திருச்செந்தூர், பழனி மற்றும் ஆறுபடை முருகன் தலங்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வழிபாடு செய்கின்றனர். இதனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்துக்கள் தங்களது வாழ்வியலாக வழக்கப்படுத்திக் கொண்டு தற்போது வரை இந்த புனித பாதயாத்திரையை தங்களது வேண்டுதலை நிறைவேற்றக்கூடிய

 

பாரம்பரிய கடமையாக செய்து வருகின்றனர். தைப்பூச திருவிழாவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பக்தர்கள் வரத் தொடங்கி விடுவார்கள். இப்படி பக்தர்கள் பாதயாத்திரையாக வரும்போது பல இடங்களில் விபத்து ஏற்படுகிறது . இதுமாதிரியான விபத்துக்களால் பல நேரங்களில் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது . கடந்த வாரம் கூட திருச்செந்தூர் பாதயாத்திரை சென்ற பக்தர் ஒருவர் லாரி மோதி பலியாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பழனி பாதயாத்திரை பக்தர் இருசக்கர வாகனம் மோதியதில் பலியானார்.. இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் அமரர் ஸ்ரீ இராமகோபாலன் அவர்கள் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி சாலை வேண்டும் என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அப்போதைய அரசு திண்டுக்கல்லில் இருந்து பழனி வரை மற்றும் செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை பாதயாத்திரை பக்தர்கள் பயன்படுத்திட தனியாக சாலை அமைத்துக் கொடுத்தது. அந்த சாலைகளெல்லாம் தற்போது பக்தர்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக புல் செடிகள் முளைத்து விஷ பூச்சிகள் நடமாடும் இடமாக இருப்பதால் பக்தர்கள் அதனை பயன்படுத்துவதை தவிர்த்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் போகக்கூடிய தார் சாலையில் நடந்து வரக்கூடிய சூழ்நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது மட்டுமா தாராபுரம் மார்க்கமாக வரக்கூடிய பக்தர்களுக்கு தனி சாலையே இல்லை உடுமலைப்பேட்டை வழியாக வரக்கூடிய பக்தர்களுக்கும் தனி சாலை இல்லை அவர்கள் கனரக வாகனங்கள் வரக்கூடிய தார் சாலைகளையே பயன்படுத்தி பாதுகாப்பற்ற முறையில் வருகின்றனர். இவ்வாறு நடந்து வரும் போது எதிரே வரும் வாகனங்களும் பக்தர்களுக்கு பின்னால் வரும் வாகனங்களும் இரவு நேரங்களில் அதிவேகமாக வருவதால் கவனக்குறைவாக விபத்துக்கள் ஏற்படுகின்றது. கனரக வாகனங்களை இயக்கி வரும் ஓட்டுநர்களுக்கு பக்தர்கள் நடந்து செல்வது தெரிவதற்காக ஒளிரும் குச்சிகள் கடந்த காலங்களில் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த ஒளிரும் குச்சிகள் தயார்நிலையில் இருந்தும் தற்போதுவரை கொடுக்கப்படவில்லை. பழனி பகுதி இப்படி என்றால் திருச்செந்தூர் பகுதி அதை விடக் கொடுமையிலும் கொடுமை. பல வருடங்களாக பக்தர்களுக்கு தனி சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் போட்டவாறு உள்ளது. சாலை பணி முழுமை அடையாமல் பக்தர்களை ஏமாற்றும் செயலே நடந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் திருநெல்வேலி முதல் திருச்செந்தூர் வரை தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரை இருக்கும் தார் சாலையும் மிகவும் மோசமான நிலையில் குண்டு குழியுமாக உள்ளது. திருச்செந்தூர் மற்றும் பழனி பகுதியில் பாதயாத்திரையாக வரக்கூடிய பக்தர்களுக்கு எந்த வித கழிப்பிட வசதியோ, குடிநீர் வசதியோ, மருத்துவ வசதிகளோ கிடையாது. அவ்வாறு கடினமான முறையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தனி ஏற்பாடுகள் கோவிலில் கிடையாது. அவர்களிடம் தரிசன கட்டணம் என்ற பெயரில் பணம் பறிப்பது மட்டுமே இந்து சமய அறநிலைத்துறையின் தலையாய நோக்கமாக இருப்பது வேதனைக்குரிய விஷயம். லட்சக்கணக்கான மக்கள் தைப்பொங்கலை முன்னிட்டு தைப்பூசத்தை முன்னிட்டு கோவிலுக்கு வந்து காணிக்கையாக தங்களது பெருமளவிலான பணத்தை இந்து சமய அறநிலைத்துறைக்கு கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுத்த பணத்தை எடுத்து அவர்களுக்கான வசதியை செய்து தர இந்த அரசு மறுப்பது நியாயமற்ற செயல். தைப்பூசம் என்பது கொடிய அரக்கனை அழிப்பதற்காக அன்னை பராசக்தியிடம் இருந்து முருகப் பெருமான் வேல் வாங்கிய தினமாகும் அந்த தினத்தில் அப்பன் முருகனை வழிபடுவதற்காக வரக்கூடிய பக்தர்களுக்கு அரசு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இல்லையேல் அரசுக்கே போதாத காலமாக மாறிவிடும். எனவே எந்த வித சமரசமும் இன்றி பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி சாலை வசதி, ஒளிரும் குச்சிகள், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி, சிறப்பான முறையில் தரிசனம் செய்யக்கூடிய வசதிகள் ஆகியவைகளை தமிழக அரசும் இந்து சமய அறநிலைத்துறையும் உடனடியாக செய்து தர வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Read More