தமிழக முதல்வரே உங்களுடைய மனசாட்சிக்கு தெரியும்.. யார் கலவரக்காரர்கள் என்று ..! அதனால் திசை திருப்பியது போதும் இந்துமுன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை
பாஜக போன்ற கட்சிகளை கோவையில் அனுமதித்தால் அமைதி இருக்காது , தொழில் வளம் பெருகாது, வளர்ச்சி குறைந்திடும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். பாஜகவை குற்றம் சொல்ல மக்களை நோக்கி விரலை நீட்டும் போது மற்ற மூன்று விரல்கள் தன்னைத் தான் காட்டுகிறது என்பதை முதல்வர் உணரவில்லை போலும். திமுக ஆட்சியில் குண்டு வெடிப்பு எப்படி நடந்தது, எதனால் நடந்தது என்பதனை மக்களுக்கு தெரியாமல் திசை திருப்ப திமுக எப்படி எல்லாம் நாடகமாடியது என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்த தேவையில்லை. கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்த சில நாட்களில் பிரபல நடிகர் ரஜினிகாந்த் அவர்களை உண்மைக்கு புறம்பாக பேச வைத்தது திமுக தலைவர் கருணாநிதி தானே.! சமீபத்தில்
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடந்த தற்கொலை வெடி குண்டு தாக்குதலை கார் சிலிண்டர் வெடிப்பு என காவல்துறை தலைவரைக் கொண்டே உண்மையை மறைத்து மக்களை திசைதிருப்ப முயற்சி செய்தது திமுக அரசு தானே.! கோவை குண்டு வெடிப்பு பயங்கரவாத குற்றவாளிகளை விடுதலை செய்தது திமுக தானே.! அதில் விடுவிக்க முடியாத தொடர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட கொடூர குற்றவாளிகளை விடுவிக்க நீதிபதியை கொண்டு குழு அமைத்துள்ளதும் திமுக தானே.! கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்து அரசு மரியாதையுடன் கேரளா வரை கொண்டு விட்டது திமுக அரசு தானே.! ஆனால் அடுத்த மாதமே நடந்த பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானியை கைது செய்து கர்நாடக சிறையில் அடைத்தது கர்நாடக காங்கிரஸ் அரசு. அப்படியானால் திமுக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மதானியை விடுதலை செய்ததால் பெங்களூரில் தாக்குதல் நடத்த துணை போனது என சொல்லலாம் தானே. கோவையில் இதுவரை நடைபெற்ற அனைத்து பயங்கரவாத செயல்களும் திமுக ஆட்சியாளர்களுக்கு தெரிந்தே நடந்தது என்பது தான் அப்பட்டமான உண்மை தானே.! அதே பயங்கரவாத குற்றவாளிகளை விடுதலை செய்ய திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்ததை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். இந்து விரோத பாசிஸ திமுக இந்துக்களுக்கும் மக்களுக்கும் எவ்வளவு துரோகம் செய்தாலும் இலவசத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கலாம் என்ற எண்ணம் தானே தொடர்ந்து பயங்கரவாத ஆதரவு மனநிலையை திமுகவிற்கு ஏற்படுத்துகிறது. இந்த முறை மக்கள் முடிவெடுத்து விட்டனர். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தானே சட்டம் ஒழுங்கு இருக்கிறது. அதனால் தமிழக முதல்வர் இதுபோன்ற குற்றச்சாட்டு வைத்திட அவசியமே இல்லையே.! கோவை மட்டும் அல்ல கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஒவ்வொரு இஸ்லாமிய பயங்கரவாத செயலுக்கும் பின்னால் திமுகவின் ஆதரவும் பாதுகாப்பும் இருக்கிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகின்றனர் மக்கள். காரணம் கர்நாடக மாநிலம் ஆனாலும் இலங்கை ஆனாலும் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதும் பாதுகாப்பாக பதுங்கி இருப்பதும் தமிழகத்தில் தான் என்பதை பத்திரிக்கை செய்திகள் வாயிலாக அறிகிறோம்.. இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது திமுக அரசு மென்மையான போக்கை கடைபிடிக்கிறது என்பது ஊரறிந்த உலகறிந்த உண்மை. இதில் வேறு கட்சிகளை திமுக தலைவர் குற்றம்சாட்டுவது பிரச்சினையை திசை திருப்ப தான் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்வர். தேர்தல் என்பது அரசியல் ஆளுமையை மக்கள் புரிந்து வாக்களிப்பது. நமது ஓட்டு உரிமையை சரியாக பயன்படுத்தி தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் யார் தேவையோ அவர்களை தேர்ந்தெடுக்க கிடைக்கும் வாய்ப்பு. அது மட்டுமல்ல தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை உணர்ந்து அதற்கு தக்க பதிலடி தரவும் வாக்கு ஓர் ஆயுதம். அதனை தவறாது தமிழக மக்கள் பயன்படுத்திட இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்