தமிழை வளர்க்க அனைத்தையும் அர்ப்பணித்த சான்றோர்கள் பெயரில் விருது வழங்க வேண்டும் - ஆட்சியில் இருப்பதால் கருணாநிதி பெயரிலேயே வழங்க வேண்டும் என நினைப்பது சர்வாதிகாரம் - மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை

தமிழ் தொண்டாற்றும் தமிழறிஞர்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார் கலைஞர் தமிழ் வளர்த்தார் என்று திமுகவினர் மேடைக்கு மேடை வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் முழங்குகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதற்கு ஒரு உதாரணத்தை காண்போம் "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்" என்ற திருக்குறளுக்கு அமரர் அருள் என்பது தேவர்களின் அருள் தெய்வத்தின் அருள் என்றுதான் மணக்குடவர் பரிமேலழகர் ஐயா திருக்குறள் முனுசாமி ஆகியோர் உரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் கலைஞர் அந்த குறளுக்கு அடக்கம் அழியாத புகழை கொடுக்கும் என்று இறை அருள் என்பதை புகழ் என்று சிறிதும்

 

சம்பந்தமில்லாத அர்தத்தை எழுதி தன்னுடைய போலி நாத்திகவாதத்தை முன்னிறுத்தி இளம் தலைமுறையினருக்கு திருக்குறளை சிதைத்து காட்டியுள்ளார் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில் இந்த ஒரு உதாரணமே கலைஞரின் தமிழ் மொழி சிதைப்புக்கு ஆதாரமாகும். அதுமட்டுமா கலைஞரின் ஆரம்ப கால படைப்புகள் முகம் சுளிக்க கூடியவை என்பதை அனைவரும் அறிவர். உள்ளபடியே தமிழ் மீது பற்று இருந்திருந்தால் தமிழ் இலக்கியங்களான திருமுறைகள், திவ்ய பிரபந்தம் போன்ற ஏராளமான பக்தி இலக்கியங்களை நாத்திகவாதம் பேசி தமிழை இகழ்ந்தவர் பெயரில் விருது அறிவிப்பது மேலும் தமிழ் மொழியை தமிழ் இலக்கண இலக்கியங்களை சிறுமைப்படுத்தும் செயலாகவே அமையும். பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் சந்திப்பிழை குறில் நெடில் பிழையில்லாமல் எழுத தெரியவில்லை. அந்த லட்சணத்தில் தான் கலைஞரின் தலைமையிலான திமுக அரசு அந்த காலம் முதல் இன்று வரை தமிழை வளர்த்துள்ளது தமிழ் இலக்கிய பொக்கிஷங்களை மாநிலமெங்கும் கால்நடையாய் நடந்து அலைந்து திரிந்து சேகரித்து அச்சேற்றியவர் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத அய்யர். பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். தமிழ்நடையின் காரணமாக தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்ட திரு.வி. க. தனது உணர்ச்சி மிகுந்த பாடல்களால் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளித்தவர் மகாகவி பாரதியார். தமிழ் மீது கொண்ட ஆழ்ந்த பற்றால் சூரிய நாராயண சாஸ்திரிகள் என்ற தன் பெயரைக் கூட தமிழில் மாற்றிக் கொண்ட பரிதிமாற் கலைஞர் என்று இப்படியான ஏராளமான தமிழறிஞர்களை புறக்கணித்து தமிழை அரசியல் லாபத்துக்காக சிதைத்தவர் பெயரில் விருது அறிவிப்பது சிறிதும் ஏற்புடையதல்ல. தமிழும் ஆன்மீகமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை ஆன்மிகம் இல்லாமல் தமிழ் இலக்கியங்கள் இல்லை. ஆன்மீகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது. ஆனால் தன் போலி நாத்திகவாத கருத்துகளுக்காக திருக்குறளின் உண்மை அர்த்தத்தையே சிதைத்து உரை எழுதியவர் எப்படி தமிழ் வளர்த்தவராக தமிழ் தொண்டாற்றியவராக கருத முடியும். அந்த வகையில் தமிழுக்காக தொண்டாற்றிய ஏராளமான தமிழ் அறிஞர்கள் இருக்கையில் தமிழை தன் அரசியல் லாபத்துக்காகவும் தன்னுடைய போலி நாத்திகவாதத்துக்காகவும் வளைத்து, திரித்து, சிதைத்த முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் அரசு செலவில் விருது வழங்குவது திமுக வின் சுய தம்பட்டம் அன்றி வேறில்லை. எனவே தமிழ் தொண்டு ஆற்றுபவர்களுக்கு கலைஞரின் பெயரில் விருது வழங்குவதை கடுமையாக எதிர்ப்பதுடன் உ வே சா பாரதியார் போன்ற நிஜமான தமிழ் அறிஞர்கள் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று இந்து முன்னனி வலியுறுத்துகிறது.

Read More