சுவாமி விவேகானந்தரை அவமதித்து இந்து மதத்தின் மீதான வன்மத்தை மீண்டும் காட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கண்டனம். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும், சுவாமி விவேகானந்தர் நினைவு பாறைக்கும் கண்ணாடி பாலம் பாதையை திறந்து வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுமென்றே விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு வருகை தராமல் அவமதித்ததை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் அடையாளம். உலக அரங்கில் இந்தியாவின் இந்து சமயத்தின் புகழை உணர வைத்தவர், உயர வைத்தவர். உலகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான வெளிநாட்டினர் சுவாமி விவேகானந்தர் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவர் தவம் செய்த அந்த இடத்தினை தரிசிக்க வருகிறார்கள். கடையனும் கடையவனுக்கு சேவை செய்வதை உயர்த்திப் பிடித்தவர் சுவாமி விவேகானந்தர். அவரது நினைவினை போற்றும் வகையில் வீரத்துறவி விவேகானந்தர்
தியானம் செய்த பாறையில் மண்டபம் எழுப்ப அரசியல் வேறுபாடு இன்றி அனைவரும் பெரும்பங்கு வகித்தது அழிக்க முடியாத வரலாறு. பாரதத்தின் தென்முனையாம் குமரிக்கடலின் நடுவே வீற்றுள்ள பாறையில் ஒற்றை காலில் கைலாயத்தில் குடி கொண்ட சிவபெருமானை நோக்கி பார்வதி தேவி தவம் இருந்தார். இதை அறிந்த சுவாமி விவேகானந்தரும் கடலுக்கு நடுவில் உள்ள பாறைக்கு நீந்தியே சென்று அங்கு மூன்று நாட்கள் கடும் தவம் செய்தார். விவேகானந்தரின் தவத்தை மெச்சிய தேவி, பாரத அன்னையாக ராஜ ராஜேஸ்வரியாக காட்சி கொடுத்தார். அதன் பிறகே சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் பங்கேற்றார். அங்கு இந்து மதத்தின் சிறப்பைக் கூறி உலக மக்களை வியக்க வைத்தார். சுவாமி விவேகானந்தர் பாரதத்தின் பொக்கிஷம். அவரது வெற்றி பயணமானது கன்னியாகுமரியில் தான் உதயமானது. அத்தகைய மகான் தவம் செய்த அந்த புனித இடத்தை தரிசிக்க மறுத்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இது எத்தகைய இந்து விரோத மனநிலை என்பதை பாரத நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த இடத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதே சுவாமி விவேகானந்தருக்காக நினைவு மண்டபம் எழுப்பிய குழுவின் தலைவர் ஏக்நாத் ராணடே அவர்கள் தான். 1979-ல் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதற்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. இந்த வரலாற்றை திமுக மறைக்கப் பார்க்கிறது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், திருவள்ளுவர் சிலையை தரிசிக்க 3 பயணியர் படகுகள் விடப் போவதாகவும், முறையே அப்படகுகளுக்கு காமராஜர், நேசமணி, ஜி.யு.போப் என பெயர் சூட்டப் போவதாகவும் கூறியுள்ளார். எதற்காக கிறிஸ்தவ மிஷனரி போப் பெயர். கன்னியாகுமரி சங்ககால புலவர்கள் பலர் பிறந்த மண். தொல்காப்பியர் மற்றும் தொல்காப்பியம் குறிப்பிடும் பல புலவர்கள் வாழ்ந்த ஊர். அதனை நினைவுப்படுத்த முதல்வருக்கு மனமில்லாமல் இத்தகைய பெருமைமிகு இடத்திலும் ஓட்டு வங்கி அரசியலுக்காக போப் பெயரை சூட்டுவது கன்னியாகுமரிக்கு பெருமை சேர்க்காது. மேலும் தமிழக அரசு அமைத்துள்ள கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று வள்ளுவரை தரிசிக்க கட்டணம் வசூலிக்கும் எண்ணம் வியாபாரத்தனம் மட்டும் அல்ல, தெய்வப்புலவராம் வள்ளுவரையே இழிவுபடுத்தும் செயல்.. கோவில் நிதியில் நடக்கும் இலவச திருமணங்கள், அன்னதானம் முதலான திட்டங்களை கோவிலுக்கு வராமல் காணொலி வாயிலாக மட்டுமே முதல்வர் தொடங்கி வைப்பது போல, சுவாமி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை நடைபாதையை திறந்து வைத்த முதல்வர், சுவாமி விவேகானந்தர் இந்துக்களுக்கு மட்டுமான துறவி என நினைத்து வேந்தர் மண்டபத்திற்கு வருவதை தவிர்த்து உள்ளார். முதல்வரே சுவாமி விவேகானந்தர் அவர்கள் பாரத தேசத்திற்கான துறவியாவார். எப்போது தமிழக முதல்வர் புரிந்து கொள்ள போகிறாரோ தெரியவில்லை. மேலும் தமிழர் முதல்வர் அவர்கள் அனைத்து விஷயத்திலும் இந்து விரோதத்தை மட்டுமே, முன்னெடுத்த செல்வது தமிழகத்திற்கும், ஏன்? இந்த நாட்டிற்கே கூட நல்லதல்ல.! மேலும் முதல்வரின் இத்தகைய செயல்பாடு சுவாமி விவேகானந்தரை மதிக்கும் நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களை அவமதிக்கும் செயல். எனவே தமிழக முதல்வர் அனைத்தையும் ஓட்டு அரசியலாக பார்ப்பதை தவிர்த்து முதல்வர் நடுநிலையோடு அனைத்து மக்களுக்கான முதல்வராக செயல்பட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது...