வழிபாட்டுரிமையை மறுக்கும் சர்வாதிகார திமுக அரசு. கந்தர் சஷ்டி பாடுபவர்களை கைது செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது - மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை

நேற்று (23/02/26) சஷ்டி மற்றும் கிருத்திகையை முன்னிட்டு *முருக பக்தர்கள் பேரவை* சார்பாக குடும்ப நலனுக்காகவும், ஊர் நன்மைக்காகவும், தமிழகத்தின் மேன்மைக்காகவும், தேச வளர்ச்சிக்காகவும், மேலும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு இடையூறின்றி நிறைவேற நேர்ந்து (வேண்டுதல்) கொண்டும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்லாயிரம் கோயில்களில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடத்தினர். கோயில்களில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யச் சென்ற முருக பக்தர்களை இது அறநிலையத்துறை கோவில் என்றும், பொது இடம் என்றும் கூறி அத்துமீறி கைது செய்து அராஜக போக்கில் ஈடுபட்டிருக்கிறது திமுக அரசு. கோவில்களில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வாய் மூலமாக

 

இந்த நிகழ்வை தடுக்க வேண்டும், வந்தவர்கள் மீது புகார் கொடுக்க வேண்டும் என்று தகவல் சென்றுள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் பல கோயில்களில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோயில்களில் கந்த சஷ்டி கவசம் பாடுவது தடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கும்பகோணம் தேனுபுரீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய கோயில்களுக்கு கந்த சஷ்டி கவசம் பாடச் சென்ற முருக பக்தர்களை வழிபாட்டு உரிமையை மறுக்கும் விதத்தில் சட்டத்திற்கு புறம்பாக அத்துமீறி கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை. மேலும் காரமடை குருந்தமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி கவசம் பாடிய முருக பக்தர்களை குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றி இருக்கிறது. மேட்டுப்பாளையம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி கவசம் பாட அனுமதி மறுத்ததை அடுத்து பக்தர்கள் சாலையில் அமர்ந்து கந்தசஷ்டி பாட வேண்டிய சூழ்நிலைக்கு தமிழகத்தில் முருக பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழக அரசாங்கத்திடம் முருக பக்தர்கள் பேரவை எந்த ஒரு வலியுறுத்தலோ, கோரிக்கையோ முன் வைக்கவில்லை. கடவுளிடம் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு பிரார்த்தனையாக அமைதியான முறையில் கோயில்களில் கந்த சஷ்டி கவசம் பாடச் சென்றவர்களை கைது செய்வதும், பாடியவர்கள் மீது அத்துமீறி நடந்து கொண்டு குண்டு கட்டாக வெளியேற்றியதும் இது அவுரங்கசீப் ஆட்சியா, பிரிட்டிஷ் அடக்குமுறையா என்று மக்கள் சந்தேகிக்கும் வகையில் உள்ளது. தமிழக இந்துக்கள் ஒவ்வொருவரும் முருகபெருமானை குல தெய்வமாக பார்க்கின்றனர். முருகனை குழந்தை தெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் வணங்குகின்றனர். அப்படிப்பட்ட முருகனின் கந்த சஷ்டி கவசத்தை தமிழக கோயில்களில் முருக பக்தர்கள் பாராயணம் செய்ய அனுமதி மறுத்து இருப்பது மூலமாக முருக பக்தர்களுக்கு அநீதியை இழைத்து இருக்கிறது தமிழக அரசு. மேலும் இந்திய அரசியல் சாசன சட்டம் மக்களுக்கு வழங்கிய வழிபாட்டு உரிமையை பறித்து அடக்கு முறையை கையாண்டு இருக்கிறது . முருக பக்தர்களுக்கு எதிரான இந்த அராஜகப் போக்கை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் பக்தர்கள் மூலமாக வருமானத்தை எடுத்துக்கொள்ளும் தமிழக அரசாங்கம் அந்தக் கோயில்களில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய சென்ற அந்தப் பகுதி பக்தர்களுக்கே கூட அனுமதி மறுத்து அவர்களை கைது செய்தது இந்திய நாட்டின் அரசியல் சாசனம் வழங்கிய வழிபாட்டு உரிமை சட்டத்திற்கு எதிரானது. சர்வாதிகாரப் போக்கில் ஈடுபட்ட தமிழக அரசு உடனடியாக ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

Read More