இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்க நினைக்கிறதா தமிழக அரசு? - இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை
தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு ஆலோசனைக்குழு உறுப்பினராக திரு. சுப. வீரபாண்டியன் அவர்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். கல்வியை, கற்பித்தலை கிறிஸ்தவர்ககளிடமும் , இந்து மத வெறுப்பு கொள்கை உடையவர்களிடமும் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. இது பேரபாயம். ஆபத்து என இந்துமுன்னணி எச்சரிக்கிறது. தமிழர்களின் பண்பாடாம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில் கள்ளக் காதல் தவறல்ல, அது திருமணம் கடந்த உறவு என புது விளக்கம் கொடுத்து பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்க, இளைஞர்களின் எதிர்காலத்தை கெடுக்கத்துடித்தவர் திராவிட இயக்க தமிழர் பேரவையின் நிறுவனர் சுப.வீரபாண்டியன். ஏற்கனவே தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல்
பணிகள் கழகத் தலைவராக கிறிஸ்தவ பட்டிமன்ற ஆபாச பேச்சாளரான திண்டுக்கல் ஐ.லியோனியை தமிழக அரசு நியமனம் செய்த போதே தமிழக மக்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இப்பொழுது தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் கடவுள் மறுப்பு மற்றும் இந்து மத வெறுப்பு கொள்கையில் தீவிர ஈடுபாடு கொண்ட சுபவீரபாண்டியனை நியமித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகும். தங்களை மதசார்பற்ற அரசு என்று கூறிக்கொள்ளும் தமிழக அரசு கிறிஸ்தவர்களையும், கடவுள் மறுப்பாளகளையும் இந்துமத வெறுப்பாளர்களையும் தொடர்ந்து உயர் பொறுப்புக்களில் நியமிப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. திமுக அரசின் இந்த செயல்களால் வளரும் இளைய தலைமுறை கடுமையாக பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக சுப.வீரபாண்டியனின் நியமனத்தை திரும்பப்பெற வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.